தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பற்றிய விரிவான தொகுப்பு
வாரிய அமைப்பு
தொழிற்சாலை கண்காணிப்பு மற்றும் இசைவாணை வழங்குதல்
ஆய்வு மற்றும் மாதிரிகளை எடுப்பதற்கான காலவரையறை
பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
கழிவுப் பொருட்கள் மேலாண்மை
மருத்துவக் கழிவுகள் மேலாண்மை
நகர திடக்கழிவுகள் மேலாண்மை
பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை
மின்னணுக் கழிவுகளின் மேலாண்மை
காற்று மற்றும் நீரின் தன்மையை கண்காணிக்க வாரியத்தின் நடவடிக்கைகள்
காற்றின் தன்மை கண்காணிப்பு
வாகனப்புகை கண்காணிப்பு
நீரின் தன்மை கண்காணிப்பு
வாரியத்தின் இதர முக்கிய பணிகள்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமானது நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், (1974), நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) மேல் வரி சட்டம்(1977) காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் (1981), மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டம் (1986) ஆகிய முக்கிய சட்டங்களையும், அவற்றின் கீழ் அடங்கியுள்ள விதிகளையும் செயல்படுத்தும் பொறுப்பைக் கொண்டுள்ளது. சென்னையைத் தலைமையிடமாக கொண்டுள்ள இந்த வாரியத்திற்கு மாநிலம் முழுவதும் பல்வேறு கிளை அலுவலகங்கள் உள்ளன.
வாரிய அமைப்பு
தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய செயல்பாடுகளை மேற்பார்வையிடவும், கொள்கை ரீதியான முடிவுகளை எடுத்து வாரியத்தின் நடவடிக்கைகளில் வழிகாட்டவும் ஒரு இயக்குநர் குழு அமைந்துள்ளது. இக்குழுவின் முழுநேர தலைவர் மாநில அரசால் நியமிக்கப்படுகிறார். அவரோடு, அரசின் உயர் அதிகாரிகள் ஐவரும், உள்ளாட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளாக ஐவரும், விவசாயம், தொழில் மற்றும் மீன்வளம் ஆகிய முக்கிய பிரிவுகளை சார்ந்த மூன்று நிபுணர்களும், பொதுத் துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளாக இருவரும் மற்றும் ஒரு உறுப்பினர் செயலாளரும் இக்குழுவில் உறுப்பினர்கள் ஆவர். இவ்வாரியத்திற்கு மாவட்ட அலுவலகங்கள் 28 இடங்களில் அமைந்துள்ளன. இந்த வாரியத்தில் மொத்தம் 744 பேர் பணிபுரிகின்றனர். அதில் தலைமைச் சுற்றுச்சூழல் பொறியாளர்கள், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் மற்றும் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள், விஞ்ஞானிகள், சட்ட நிபுணர்கள் முதலியோர் அடங்குவார்கள்.
தொழிற்சாலை கண்காணிப்பு மற்றும் இசைவாணை வழங்குதல்
தமிழ்நாட்டில் வேகமாக பெருகிவரும் தொழில்மயமாக்கல் காரணமாக தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் மாசினைத் தொடர்ந்து கண்காணிப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. வாரியத்தின் கள அலுவலர்கள் தங்களின் பகுதிக்குட்பட்ட ஒவ்வொரு தொழிற்சாலையையும் குறித்த கால இடைவெளிகளில் ஆய்வு செய்து, கழிவுநீர் மற்றும் வாயுக்கழிவுகளைச் சுத்திகரிக்க அமைக்கப்பட்டுள்ள மாசு கட்டுப்பாடு சாதனங்களின் செயல்திறனைத் தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.
தொழிற்சாலைகளால் வெளியிடப்படும் மாசு அளவினைப் பொறுத்து அவைகள் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மூன்று வகைப்படுத்தப்பட்டன. மிக அதிகளவு மாசுப்படுத்தக்கூடிய தொழிற்சாலைகள் சிவப்பு வகையிலும், குறைந்த அளவு மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் பச்சை வகையிலும் அடங்கும்.
சிவப்பு வகை அதிகளவு மாசுபடுத்தக் கூடிய தொழிற்சாலைகளைக் குறிப்பதால் அவற்றை கவனமாக கண்காணிக்க 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இவ்வகை தொழிற்சாலைகள் அடர் சிவப்பு மற்றும் சாதாரணச் சிவப்பு என்று இருவகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆய்வு மற்றும் மாதிரிகளை எடுப்பதற்கான காலவரையறை
மாவட்ட அலுவலகத்தில் உள்ள களப்பொறியாளர்கள் பெரிய முதலீட்டில் இயங்கும் அடர் சிவப்பு வகை தொழிற்சாலைகளை மாதம் ஒருமுறையும், சாதாரண சிவப்பு வகை தொழிற்சாலைகளை மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், நடுத்தர முதலீட்டில் இயங்கும் சிவப்பு வகை தொழிற்சாலைகளை நான்கு மாதத்திற்கு ஒரு முறையும், சிறிய முதலீட்டில் இயங்கும் சிவப்பு வகை தொழிற்சாலைகளை வருடத்திற்கு ஒரு முறையும் ஆய்வு செய்கின்றனர். இதைப் போன்றே பெரிய மற்றும் நடுத்தர முதலீட்டில் இயங்கும் ஆரஞ்சு வகை தொழிற்சாலைகளை ஆறு மாதத்திற்கு ஒரு முறையும், சிறு முதலீட்டில் இயங்கும் ஆரஞ்சு வகை தொழிற்சாலைகளை இரண்டு வருடத்திற்கு ஒரு முறையும் ஆய்வு செய்கின்றனர். குறைந்த அளவு மாசு ஏற்படுத்தும் பச்சை வகை தொழிற்சாலைகள் அனைத்தும் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுகின்றன.
தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரை சோதனை செய்வதன் மூலம் அத்தொழிற்சாலைகள் மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனவா என்பது புலனாகிறது. பெரிய முதலீட்டில் இயங்கும் அடர் மற்றும் சாதாரண சிவப்பு வகை தொழிற்சாலைகளிலிருந்து மாதம் ஒரு முறை கழிவுநீர் மாதிரிகள் சோதனைக்காக சேகரிக்கப்படுகின்றது. நடுத்தர முதலீட்டில் இயங்கும் சிவப்பு வகை தொழிற்சாலைகளிலிருந்து மூன்று மாதத்திற்கு ஒருமுறையும், சிறு முதலீட்டில் இயங்கும் சிவப்பு வகை தொழிற்சாலைகளிலிருந்து மூன்று முதல் ஆறு மாதத்திற்கு ஒருமுறையும் கழிவுநீர் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. பெரிய முதலீட்டில் இயங்கும் ஆரஞ்சு வகை தொழிற்சாலைகளிலிருந்து நான்கு மாதத்திற்கு ஒருமுறையும், நடுத்தர மற்றும் சிறு முதலீட்டில் இயங்கும் ஆரஞ்சு வகை தொழிற்சாலைகளிலிருந்து ஆறு மாதத்திற்கு ஒரு முறையும் கழிவுநீர் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. வாரியம் நிர்ணயித்த தர அளவிற்கு உட்பட்டு கழிவுநீரின் தன்மை இல்லாத தொழிற்சாலைகளுக்கு, திருத்த நடவடிக்கைகள் எடுக்க வாரியம் அறிவுறுத்துகின்றது. தொடர்ந்து கழிவுநீரினை சுத்திகரிப்பு செய்யாத தொழிற்சாலைகளுக்கு வாரியம் காரணம் கேட்டு முகாந்திரக் கடிதம் வழங்குகின்றது. இக்கடிதத்திற்கு உரிய விளக்கம் அளிக்காமலும் தொடர்ந்து கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யாமலும் வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது நீர் சட்டத்தின்படி மூட உத்தரவிடுவதோடு மின் இணைப்பு துண்டிக்க தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உத்தரவு வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
தொழிற்சாலைகள் மாசு தடுப்பு நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மாசு தடுப்பு சாதனங்களின் செயல்பாடுகளை சீரிய முறையில் கண்காணித்து மாசு தடுப்பு முறைகளை முழுமையாக நிறைவேற்றும் தொழிற்சாலைகளுக்கு குறித்த நேரத்தில் இசைவாணை புதுப்பிக்கப்படுகிறது. உரிய நேரத்தில் இசைவாணை புதுப்பித்து வழங்குவதன் மூலம் தொழிற்சாலைகள் இசைவாணையில் குறிப்பிட்டுள்ள மாசு தடுப்பு நிபந்தனைகளை கடைபிடிப்பதை வாரியம் ஊக்குவிக்கிறது.
பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தொகுப்பாக அமைந்திருக்கும் சிறுதொழிற்சாலைகளுக்காக பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஏற்படுத்துவதில் வாரியம் முக்கியமாக முழுக்கவனம் செலுத்துகின்றது. சிறு தொழிற்சாலைகளுக்குப் போதிய இடவசதி மற்றும் நிதி வசதி இல்லாத காரணங்களால் தனி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க சாத்தியமில்லை. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சிறு தொழிற்சாலைகளுக்குப் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்குத் தேவையான நிதி ஆதாரங்களை திரட்டுவதிலும், திட்டக் கருத்துருக்களைத் தொழில் நுட்ப நுண்ணாய்வு செய்வதிலும் உதவி செய்கிறது.
கழிவுப் பொருட்கள் மேலாண்மை
தீங்கு விளைவிக்கக்கூடிய இரசாயனப் பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கழிவுப் பொருட்களைச் சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக கையாளுவதற்கு தகுந்த மேலாண்மை நடவடிக்கையினை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் எடுத்து வருகிறது.
மருத்துவக் கழிவுகள் மேலாண்மை
இந்திய அரசு, சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986ன் கீழ் மருத்துவக்கழிவு (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகள் 1998 (2000 ஆண்டில் திருத்தப்பட்டது) அறிவிக்கை செய்துள்ளது. இவ்வறிவிக்கையின்படி, மருத்துவக் கழிவுகளைகளை அங்கீகரிக்கப்பட்ட முறையில் வகைப்படுத்தி, சுத்திகரித்து முடிவு செய்யவேண்டும்.
மாநிலத்தில் உள்ள தனியார் சுகாதார பராமரிப்பு நிலையங்களுக்காக மருத்துவ கழிவுகள் சுத்திகரிப்பு மற்றும் வெளியேற்றும் பொது அமைப்புகளை ஏற்படுத்த 11 இடங்கள் கண்டறியப்பட்டு, 11 பொது அமைப்புகளும் இயக்கத்தில் உள்ளன. பொது மருத்துவக்கழிவு சுத்திகரித்தல் மற்றும் வெளியேற்றும் வசதியினைக் பகுப்பாய்வு செய்வதற்கும், கண்காணிப்பதற்கும், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
நகர திடக்கழிவுகள் மேலாண்மை
நகர மயமாதல் அதிகமாவதாலும், நகர திடக்கழிவுகளின் அளவு அதிகரிப்பதாலும், அறிவியல் ரீதியாக திடக்கழிவுகளை மேலாண்மை செய்வது அவசரத் தேவையாகிறது. திடக்கழிவுகளை ஆதாரத்திலே பிரித்து கையாளுதல், குறைத்தல், மறுசுழற்சி செய்தல் மற்றும் மறுஉபயோகம் செய்தல் போன்றவற்றை வாரியம் பரிந்துரைக்கிறது. வாரியம், உயிரகக் கழிவுகளை உரமாக்குவதற்காக 109 நகராட்சிகளுக்கும் மற்றும் ஒரு மாநகராட்சிக்கும் தடையில்லா சான்றிதழை வழங்கியுள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை
பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம் பெருகுவதால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. பொதுமக்களிடையே ஒருமுறை பயன்பாட்டிற்கு பிறகு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் பெருகிவிட்டன.
இதனால் நகரத்திடக் கழிவுகளின் அளவு பெருகியதோடு மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேட்டினை விளைவித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பிளாஸ்டிக் (உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு) விதிகளை செயல்படுத்தி வருகின்றது. இவ்விதிகளின்படி 20 மைக்ரான் தடிமனுக்கு கூடுதலான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட வேண்டும்.
மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், வரும் நிதி ஆண்டில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்பவர்களை கண்டறிதல் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு விதிகளை செம்மையாக நடைமுறைபடுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறிய ஒரு அறிக்கையினை தயாரித்து நடவடிக்கை மேற்கொள்ளும்.
மின்னணுக் கழிவுகளின் மேலாண்மை
மின்னணுக் கழிவுகளின் மேலாண்மை குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. இதன் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், தேசிய உலோகப் பொறியியல் ஆய்வு நிறுவனத்தின் வல்லுநர் (NML) மற்றும் அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு மின்ணணுக்கழிவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. மின்னணுக் கழிவுகளைப் பிரித்து மறுசுழற்சி செய்யும் 12 தொழிற்சாலைகளுக்கு மின்னணுக் கழிவுகளை முறையாகப் பிரித்து அவற்றில் உள்ள அச்சு சுற்றுத்தகடு, ஒருங்கிணைக்கப்பட்ட சுற்று, இரும்பு, செம்பு, ரப்பர், கண்ணாடி முதலியவற்றை பிரித்தெடுப்பதற்கு இசைவாணை வழங்கியுள்ளது. இவற்றில் அச்சுச் சுற்றுத்தகடு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சுற்று முதலியவை அமெரிக்க ஐக்கிய நாடுகள், சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற மேலை நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அவற்றில் உள்ள கன உலோகங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. மற்ற கழிவுகள் அங்கீகாரம் பெற்ற உள்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மறுசுழற்சிக்காக அனுப்பப்படுகின்றன.
காற்று மற்றும் நீரின் தன்மையை கண்காணிக்க வாரியத்தின் நடவடிக்கைகள்காற்றின் தன்மை கண்காணிப்பு
நகர்புறங்களில் பெருகிவரும் தொழிற்சாலைகளிலிருந்தும், வாகனங்களிலிருந்தும் வெளியேறும் வாயுக் கழிவுகளினாலும் புகையினாலும் சுற்றுப்புறக்காற்றின் தன்மை மாசடைகிறது. காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981-ன்படி தமிழ்நாடு மாநிலம் முழுவதும் காற்று மாசு கட்டுப்பாடு பகுதியாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சுற்றுப்புற காற்று மண்டல கண்காணிப்புத் திட்டங்களின் கீழ் சென்னை (3 இடங்கள்), கோவை (3 இடங்கள்), தூத்துக்குடி (3 இடங்கள்), மதுரை (3 இடங்கள்), சேலம் (1 இடம்) ஆகிய இடங்களில் காற்று மண்டல கண்காணிப்பு நிலையங்கள் இயக்கத்தில் உள்ளன.
இத்திட்டமானது மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் நிதி உதவியுடன் செயல்பட்டு வருகின்றது. வாரியம் சென்னை மாநகரில் 5 சுற்றுப்புறக் காற்று தரக்கண்காணிப்பு நிலையங்களையும், திருச்சிராப்பள்ளியில் 5 நிலையங்களையும் அமைத்துள்ளது. இந்நிலையங்களில் சுற்றுப்புறக் காற்றின் தன்மையினை அந்த நகரங்களின் மக்கட் தொகை மிகுந்த குடியிருப்பு, வர்த்தகப் பகுதியில் கண்காணிக்கப்படுகின்றது. இது தவிர வாரியம் காற்று மாசு கண்காணிப்பினை தீபாவளி மற்றும் போகி பண்டிகை காலங்களில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மேற்கொண்டு வருகிறது. சென்னை நகரில் சுற்றுச்சூழல் காற்று கண்காணிப்புத் திட்டத்தை மேம்படுத்த கார்பன் மோனாக்ஸைடு மாசினைக் கண்டறிய 5 கார்பன் மோனாக்ஸைடு அளவிடும் கருவிகள் 25 இலட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ளது.
மேலும் வாரியம் சுற்றுப்புற காற்றில் உள்ள ஒசோன் மாசினை அளவிடும் கருவிகளை வாங்கவும் அதன் மூலம் சென்னை, கோவை, கடலூர் ஆகிய இடங்களில் தொழிற்சாலை, வணிக பகுதிகளில் ஓசோன் மாசு குறித்து அளவிட உத்தேசித்துள்ளது. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் வாயுக்கழிவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மாசின் அளவினைக் கண்டறிய பகுப்பாய்வு செய்யப்படுகிறது
வாகனப்புகை கண்காணிப்பு
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், சென்னை நகரில் மூன்று இடங்களில் மாதவரத்தில் ஒன்றும் மற்றும் அம்பத்தூரில் இரண்டு இடங்களிலும் வாகனப்புகை கண்காணிப்பு நிலையங்களை அமைத்து சரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கு வாகனப்புகை கண்காணிப்பினை செய்து வருகிறது. வாகனங்கள் வெளியேற்றும் புகை, தரக்கட்டுப்பாட்டினை மீறும் பட்சத்தில் அதனை சரிசெய்து வாகனப்புகையினை தரக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தபிறகு வாகனங்களுக்கு புகை தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. சரக்கு வாகனங்கள் தவிர பிற வாகனங்களில் புகை சோதனை மேற்கொண்டு புகை தர சான்றிதழ் வழங்க வசதியாக சென்னை நகரில் 75 தனியார் புகை சோதனை நிலையங்களுக்கு அரசு போக்குவரத்து துறை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நீரின் தன்மை கண்காணிப்பு
1974-ஆம் ஆண்டு நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின் முக்கிய நோக்கமானது நீரின் முழுத்தன்மையை பேணுதல் மற்றும் சீரமைத்தல் ஆகும். இந்த நோக்கத்தை நிறைவேற்ற நீரின் தன்மையை ஒழுங்காகக் கண்காணிப்பது அவசியமாகிறது.
எனவே, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் காவிரி ஆற்று நீரின் தன்மையை இந்திய தேசிய நீர்வள ஆதாரங்கள் கண்காணிப்பு (மினார்ஸ்) திட்டத்தின் கீழ் 16 இடங்களிலும் மற்றும் புவி சுற்றுப்புறச்சூழல் கண்காணிப்பு (ஜெம்ஸ்) திட்டத்தின் கீழ் 4 இடங்களிலும் கண்காணித்து வருகின்றது. இதைத்தவிர தாமிரபரணி, பாலாறு மற்றும் வைகை ஆறுகளின் தன்மையையும், உதகமண்டலம், கொடைக்கானல், ஏற்காடு ஏரிகளின் நீரின் தன்மையையும் இந்திய தேசிய நீர்வள ஆதாரங்கள் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்திற்கு டெல்லியிலுள்ள மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் நிதி உதவியளிக்கிறது.
கூடுதலாக, காவிரி, தாமிரபரணி, பாலாறு மற்றும் வைகை நதிநீர் படுகையில் உள்ள மாசினை அளவிட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களின் மூலமாக நீர்நிலைகளின் தரத்தினை ஆய்வு செய்து வருகிறது.
காவிரி ஆறு
காவிரி ஆற்றில் 20 இடங்களில் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படுகிறது. பொதுவாக காவிரி ஆற்றின் நீரின் தரம் குளிப்பதற்கும் முறையான சுத்திகரிப்பு மற்றும் கிருமிநாசினி மூலம் சுத்திகரித்து குடிப்பதற்கும், மீன்வளர்ப்பு மற்றும் வனவிலங்குகள் பெருக்க பயன்பாட்டிற்கும் உகந்ததாக காணப்படுகிறது.
தாமிரபரணி ஆறு
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தாமிரபரணி ஆற்றின் நீரின் தன்மையை ஏழு இடங்களில் கண்காணித்து வருகின்றது. தாமிரபரணி நீரின் தன்மை பொதுவாக குளிப்பதற்கும், முறையான சுத்திகரிப்பு மற்றும் கிருமிநாசினி மூலம் சுத்திகரித்து குடிப்பதற்கும் உகந்ததாக காணப்படுகின்றது.
பாலாறு
வாணியம்பாடி நகராட்சி குடிநீர் நீரேற்று நிலையத்தில் உள்ள நீர் சேகரிப்பு கிணற்றிலிருந்து நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. ஆய்வறிக்கையின் புள்ளியல்படி பாலாறு நீரின் தரம் பொதுவாக குளிப்பதற்கும் முறையான சுத்திகரிப்பு மற்றும் கிருமிநாசினி மூலம் சுத்திகரித்து குடிப்பதற்கும் உகந்ததாக காணப்படுகின்றது.
வைகை ஆறு
வைகை ஆற்று நீரின் தன்மை திருபுவனம் நீரேற்று நிலையத்தின் நீர் சேகரிப்பு கிணற்றிலிருந்து நீர் மாதிரி சேகரித்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. வைகை ஆற்று நீரின் தன்மை பொதுவாக குளிப்பதற்கும் முறையான சுத்திகரிப்பு மற்றும் கிருமிநாசினி மூலம் சுத்திகரித்து குடிப்பதற்கும் உகந்ததாக காணப்படுகின்றது.
ஏரிகள்
இந்திய தேசிய நதிநீர் ஆதாரங்களை கண்காணிக்கும் திட்டத்தின் கீழ் உதகமண்டலம், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு ஏரிகளில் நீர் மாதிரிகள் சேகரித்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. உதகமண்டலம், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு ஏரியின் நீரின் தன்மை முறையான சுத்திகரிப்பும், அதை தொடர்ந்து கிருமிநாசினி மூலம் சுத்திகரிப்பும் செய்து குடிநீர் பயன்பாட்டிற்கும் மற்றும் மீன்வளர்ப்பு, வனவிலங்குகள் பெருக்க பயன்பாட்டிற்கும் உகந்ததாக காணப்படுகிறது.
சென்னை மாநகர நீர்வழிக் கண்காணிப்பு திட்டம்
சென்னை மாநகரில் அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா ஆகிய நான்கு நீர்வழித் தடங்கள் உள்ள 34 நீர் நிலைகளிலும், 24 தொழிற்சாலை கழிவு நீர் வெளியேற்ற நிலைகளிலும் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நீரின் தன்மை கண்காணிக்கப்படுகிறது.
வாரியத்தின் இதர முக்கிய பணிகள்
சுற்றுச்சூழல் பயிற்சி நிலையம்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஒரு பகுதியான சுற்றுச்சூழல் பயிற்சி நிலையம் 1994 ஆம் ஆண்டு தலைமை அலுவலகத்தில் துவங்கப்பட்டது. சுற்றுச்சூழல் பயிற்சி நிலையத்தின் முக்கிய குறிக்கோள் மாசு கட்டுப்பாடு வாரியத்தில் பணிபுரிவோர், தொழிற்சாலை பிரதிநிதிகள் மற்றும் அரசு சாரா அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு பயிற்சி அளித்தல் ஆகும்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வளர்க்க, சென்னையில் உள்ள வாரிய தலைமை அலுவலகத்தில் மாசு விழிப்புணர்வு மற்றும் சேவை மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலங்களின்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசு, போகி பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசு, வாகனப்புகையினால் ஏற்படும் மாசு, ஓசோன் படலம் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை , சாலை பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு போன்ற விழிப்புணர்வு இயக்கங்கள், பயிலகங்கள் மற்றும் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு இந்த மையம் 2008-09ஆம் ஆண்டில் 46 விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த விளம்பரப் பலகைகள், 409 அரசு பேருந்துகளின் உட்புறம் வைக்கப்பட்டுள்ளது.
இடம் சார்ந்த சுற்றுச்சூழல் திட்டங்கள்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான இடம் சார்ந்த சுற்றுச்சூழல் திட்டங்கள் அடிப்படையில், புவியியல் தகவல் முறைகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட மாவட்டச் சுற்றுச்சூழல் வரைபடம், மண்டல வரைபடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டங்கள் ஆகியன தயாரிக்கும் பணிகளை 2000 - 2001 ஆம் ஆண்டு முதல் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரிய உதவியுடன் செயல்படுத்தி வருகின்றது.
இதன் மூலமாக கோயம்புத்தூர், வேலூர், தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, சேலம், கரூர், மதுரை, நாமக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களுக்கான மாவட்ட சுற்றுச்சூழல் வரைபடமும் மற்றும் சென்னை மாநகருக்கானச் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பசுமை போர்வை திட்டம்
மாசினைத் தடுக்கும் வழிமுறையாக, தொழிற்சாலைகள் தங்களது வளாகத்தில் 25 சதவீதம் நிலப்பரப்பில் அடர்த்தியான மரங்களை வளர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தொழிற்சாலைகள் போதிய அளவு மரங்களைத் தங்களது வளாகத்திலும் மற்றும் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வளர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன.
தூய்மையான தொழில் நுட்பங்கள்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தொழிற்சாலைகள் கழிவுநீரைச் சுத்திகரிக்க மேற்கொள்ள செய்வது மட்டுமன்றி சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்த தூய்மையான தொழில் நுட்பத் திறனை வளர்ப்பதில் ஈடுபட்டுள்ளது. வாரியத்தின் முனைப்பான ஆதரவு மற்றும் ஊக்குவிப்புடன் தொழிற்சாலைகள், எரிசோடா உற்பத்தியில் பாதரச கலத்திற்கு பதிலாக சவ்வூடு கலம் பயன்படுத்துதல், சிமெண்ட் தொழிற்சாலைகளில் காற்று மாசினைக் குறைக்க ஈர செய்முறைக்கு பதிலாக உலர் செய்முறையினைப் பின்பற்றுதல், பி.பி.சி சிமெண்ட் உற்பத்தியில் 25 முதல் 30% வரை எரிசாம்பலை பயன்படுத்துதல், கந்தக அமிலம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருமுறை மாற்றம் மற்றும் உட்கிரகிக்கும் தொழில்நுட்பத்தை செயல்படுத்துதல், சயனைடு அற்ற முலாம் பூசுதல் மற்றும் சயனைடு உப்புக்கு பதிலாக வாயு கார்புரைசிங் முறையை வெப்பக்கடினப்படுத்துதலுக்கு பின்பற்றுதல் ஆகிய தூய்மையான தொழில்நுட்பங்களுக்கு மாறியுள்ளன. மரக்கூழ் மற்றும் காகித தொழிற்சாலைகள், டையாக்ஸின் உள்ளிட்ட ஆர்கேனோ - குளோரைட்ஸ் உருவாவதை குறைக்கும் வகையில் குளோரின் மூலக்கூறு இல்லாத சலவை முறையினை பின்பற்ற ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றன. ஓசோனைச் சிதைக்கும் பொருட்களை உபயோகிக்கும் தொழிற்சாலைகள் முறையாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை உபயோகப்படுத்தி வருகின்றன.
நூலகம்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய நூலகம் 1989-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தற்போது இந்நூலகம் 10,301 புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளைக் கொண்டுள்ளது. இந்த நூலகத்திற்கு சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட 79 இதழ்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), 9 செய்தி மடல்கள், 13 மாத இதழ்கள் தருவிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஈடுபடும் அனைவரும் இதில் உறுப்பினராகலாம்.
செய்தி மடல்
வாரியத்தின் செயல்பாடுகள், ஒவ்வொரு மாவட்டத்தைப் பற்றிய சுற்றுச்சூழல் சம்பந்தமான செய்திகள், சுற்றுச்சூழல் சம்பந்தமான கவிதைகள் மற்றும் கட்டுரைகள் அடங்கிய செய்திமடல் ஒன்றை வாரியம் ஒவ்வொரு காலாண்டிற்கும் வெளியிட்டுவருகின்றது. இந்த செய்திமடல் அரசு துறை அலுவலகங்களுக்கும், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் மற்றும் அனைத்து மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றது.
நிறுவனத்தை வலுப்படுத்துதல் மற்றும் திறனை மேம்படுத்துதல்
வாரியத்தின் உள்கட்டமைப்பு வசதியினை மேம்படுத்தும் பொருட்டு வாரியத்திற்குச் சொந்தமாக தலைமை அலுவலக கட்டிடம் கிண்டியில் கட்டப்பட்டதுடன், மாவட்ட அலுவலகங்களுக்கு அம்பத்தூர், ஒசூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகின்றது.
ஆதாரம் : சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு அரசு
Tags
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்,Tamil Nadu Pollution Control Board, முக்கிய பணிகள்.சுற்றுச்சூழல் திட்டங்கள்,பசுமை போர்வை திட்டம்,தூய்மையான தொழில்
#tnpcb #Pollution #TamilNaduPollutionControlBoard,
Social Plugin